அத்திப்பழம் ATHIPAZHAM  (FIG FRUIT)

அத்திப்பழம் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பழம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதை அஞ்சீர் என்ற பெயரில் அழைக்கின்றனர். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது  உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

அத்திப்பழம் ATHIPAZHAM  (FIG FRUIT)

அத்திப் பழங்கள் 6&8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன.  பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி, நாட்டு அத்தி. அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும்.  விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது.

அத்திப்பழ சத்துகள்

50கி. அளவுள்ள அத்திப்பழம் ஒன்றில் நார்ச்சத்து-5.8%, பொட்டாசியம் -3.3% கால்சியம் -100மி.கி. இரும்பு -2.மி.கி. மாங்கனீஸ்-3%, கலோரி -2% வைட்டமின் பி 6-3% அளவு உள்ளது மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. அதேபோன்று நார்ச் சத்துகளும் கால்சியமும் அதிக அளவு உண்டு. அத்திப்பழத்தை சாறாக்கி குடித்தாலும் உலர வைத்துச் சாப்பிட்டாலும் இதிலிருக்கும் சத்துக்களின் அளவு குறைவதில்லை.

எப்படி சாப்பிடலாம்?

அத்தி மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும் அத்திமரத்தைக் கண்டால் அதிலிருக்கும் அத்திப்பிஞ்சுகளைப் பறித்து பொரியலாக, கூட்டாகச் செய்து சாப்பிடலாம். அத்திப்பழங்கள் பெரும்பாலானவை சொத்தையாக இருக்கும். உள்ளிருக்கும் பழப்பகுதியை நுணுக்கமாக ஆராய்ந்தால் மெல்லிய புழுக்கள் இருக்கும். அதனால்தான் அத்திப்பழம் சொத்தைப்பழம் என்றும் சொல்வார்கள்.  சுத்தமான அத்திப்பழங்களைச் சாறாக்கி தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கலாம். இந்த சாறில் கல் உப்பு சேர்த்தும் பருகுவது உண்டு.

பிணி நீக்கும் அத்திப்பழம்

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3 வேளையும் வேளைக்கு ஒன்றாக உலர் அத்திப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து நிறைந்த அத்திப்பழத்தால் ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு 1 கிராம் வரை உயரும். கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிகளும் உலர் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.

​உடல் எடையை குறைக்க

அத்திப்பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதனால் அத்திப்பழத்தை சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகிறது. இதனால் தேவையில்லாமல் கலோரி நிறைந்த உணவுகளில் நாட்டம் கொள்வது தவிர்க்கப்படுகிறது.  இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் குடல் அமைப்புக்கு உதவுகிறது. இது செரிமான அமைப்பை பலப்படுத்த உதவுகிறது.

செரிமான ஆற்றலும் வளர்சிதை மாற்றமும்

அத்திப்பழத்தில் உள்ள ஃபைசின் என்ற நொதி நம்முடைய செரிமான மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது. இது உணவை விரைவாக செரிக்க உதவுகிறது. அதே போல் உடற்பயிற்சியின் போது தசைகள் அதிக கலோரியை எரிக்க உதவுகிறது.  ஏனெனில் இதில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது எடை இழப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.  இது இதய நோய்களில் இருந்து நம்மை தடுக்க உதவுகிறது.

​நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள்

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு உணவில் இனிப்பு சுவையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.  வீட்டில் யாருக்கும் தெரியாமல் இனிப்பை வாங்கி சாப்பிடுவது போன்றவற்றைச் செய்வார்கள். உங்களுடைய இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற ஆசைக்கும் அத்திப்பழம் ஒரு மாற்றாக இருக்கும். இருப்பினும் இதை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் டயாபெட்டிக் நோயாளிகள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பிற பயன்கள்

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.